இறந்த தாயாரின் சடலத்தை அடக்கம் செய்யாமல் மகள்கள் ஜெபம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்திலுள்ள சொக்கம்பட்டி பகுதியில் ஓய்வு பெற்ற ஆசிரியையான அன்னமேரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகாத ஜெசிந்தா, ஜெயந்தி என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட மேரியை பார்ப்பதற்காக உறவினர் ஒருவர் புதுச்சேரியிலிருந்து சொக்கம்பட்டிக்கு சென்றுள்ளார். அப்போது இறந்த மேரியை படுக்கையில் வைத்து தங்களது தாயை உயிர்பிப்பதாக கூறி மகள்கள் ஜெபம் செய்து கொண்டிருந்ததைப் பார்த்து உறவினர் அதிர்ச்சி அடைந்தார்.
இதனையடுத்து தாயின் உடலை அடக்கம் செய்யுமாறு கூறிய அந்த உறவினரை சகோதரிகள் திட்டி வெளியே அனுப்பி விட்டனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மேரியின் வீட்டுக்கதவை நீண்ட நேரமாக கட்டியுள்ளனர். ஆனால் ஒரு மணி நேரம் பிறகு சகோதரிகள் கதவை திறந்துள்ளனர். அப்போது மேரியின் உடல் அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசியதை பார்த்து காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து தங்களது தாயார் உயிருடன் எழுந்து வருவார் என நம்புவதாகவும், உடலை எடுத்துச் செல்ல விடமாட்டோம் என கூறியும் சகோதரிகள் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்பிறகு மிகவும் சிரமப்பட்டு காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அந்த பிரேத பரிசோதனை அறிக்கையில் மேரி இறந்து 7 நாட்கள் ஆனது தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து காவல்துறையினர் மேரியின் மகள்களுக்கு கவுன்சிலிங் அளித்தனர். அதன்பிறகு மேரியின் மகள்கள் தங்களது தாய் உடலை வீட்டிற்கு பின்புறம் இருக்கும் ஒரு பகுதியில் புதைக்க முடிவு செய்துள்ளனர். ஆனால் ஊர் எல்லைக்குள் மேரியின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறையினரின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு பின் மேரியின் உடலானது அப்பகுதியில் புதைக்கப்பட்டுள்ளது.