சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்ற ஆறாம் கட்ட அகழாய்வில் 4 அடி ஆழத்தில் இரு அடுக்குகள் தரைதளம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.
கீழடியில் மத்திய தொல்லியல் துறை 2015ம் ஆண்டு அகழாய்வு மேற்கொண்டது. தொடர்ந்து 2 மற்றும் 3ம் கட்ட அகழாய்வை நடத்தியது. மூன்று அகழாய்வுகள் மூலம் 7,818 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அகழாய்வுப் பணியை மத்திய அரசு கைவிட்டநிலையில் 4-ம் கட்ட அகழாய்வை தமிழக தொல்லியல் துறை மேற்கொண்டது.
இதில் 5,820 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. கடந்த ஆண்டு நடந்த 5ம் கட்ட அகழாய்வில் 33 குழிகள் தோண்டப்பட்டு இரட்டை மற்றும் வட்டச் சுவர், கால்வாய், தண்ணீர் தொட்டி, உறை கிணறுகள் என 700க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டன. இந்நிலையில் ரூ.40 லட்சம் ஒதுக்கப்பட்டு பிப்.19-ம் தேதி 6ம் கட்ட அகழாய்வுப் பணியை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
அதில் மூன்றரை அடி ஆழத்தில் சுண்ணாம்பு சுவர் ஒன்று முதன்முதலாகக் கண்டறியப்பட்டது. இச்சுவர் ஒரு அடி வரை இருந்தது. இந்த நிலையில் 5-ம் கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்ட சுடுமண் குழாயின் தொடர்ச்சியை கண்டறிவதற்காக தமிழக தொல்லியல் துறை மீண்டும் கீழடியில் நீதியம்மாள் நிலத்தில் அகழாய்வை தொடங்கியது. சுடுமண் குழாய் கண்டறியப்பட்ட இடத்தின் மேற்கு பகுதியில் அகழாய்வு பணி கடந்த 2 நாட்களுக்கு முன்பு தொடங்கியது.
இந்த நிலையில் இன்று 4 அடி ஆழத்தில் 2 அடுக்குகள் கொண்ட தரை தளம் தென்பட்டது. தரை தளம் கடந்த 5-ம் கட்ட தரை தளம் போல செங்கல் கட்டுமானத்திற்கு மேலே களிமண் பூச்சுடன் காணப்படுகிறது. ஏற்கனவே 5-ம் கட்ட அகழாய்வின்போது கண்டறியப்பட்ட தரைதளத்தின் 10 அடி தூரத்திலேயே இந்த தரை தளம் கண்டறியப்பட்டதால் அதன் தொடர்ச்சியாக இருக்க வாய்ப்புள்ளது என தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.