தமிழக பேருந்தில் 6 அடி இடைவெளி விட்டு பயணம் செய்வது சாத்தியமா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 4500 கடந்துள்ள நிலையில், அதனுடைய தாக்கத்தைக் குறைப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்பாட்டில் வைக்க உதவும் என்று தமிழக மக்களால் எதிர்பார்க்கப்பட்டு வரும் சூழ்நிலையில்,
மே17 இற்குப் பிறகு இதனுடைய தாக்கம் குறையுமா என்று கேள்வியும் அவர்களது மனதில் எழுந்துள்ளது. இந்நிலையில் மே 17ஆம் தேதிக்கு பிறகு 50 சதவிகிதம் பேருந்துகளை இயக்க பணி மனைகளுக்கு கட்டுப்பாடுகளுடன் இயக்க போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு மாஸ்க், சனிடைசர், கையுறை உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் என்றும், மாஸ்க் இல்லாத பயணிகளை பேருந்தில் அனுமதிக்கக் கூடாது என்றும் முறையான சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும்,
குறிப்பாக இருக்கைகளில் அமர்ந்து இருப்பவர்களை தவிர்த்து பேருந்தில் நிற்பவர்கள் சுமார் 6 அடி இடைவெளி விட்டு நிற்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தைப் பொருத்தவரையில் போக்குவரத்து என்பது எப்படி இருக்குமென மக்கள் நன்கு உணர்ந்திருப்பர்.
சாதாரண காலங்களிலேயே கிராமப்புறங்களில் போக்குவரத்து வசதி என்பது மிக குறைவுதான். பெரும்பாலான நகரங்களில் முழுமையான 100% போக்குவரத்து வசதி இருந்தபோதே பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழியும். இப்போது வெறும் 50 சதவிகிதம் பேருந்து தான் இயக்கப்படும் பட்சத்தில் பொதுமக்கள் 6 அடி சமூக இடைவெளியை கடைபிடிப்பார்களா? என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது.