காதலுக்கு கண்ணில்லை என்று கூறுவதுபோல, காதலுக்கு வயதும் கிடையாது. ஒருவருக்கு மற்றொருவர் மீது ஏற்படும் அன்பு காதல் தான். அப்படி கேரளாவில் 73 வயது முதியவர் ஒருவருக்கும், 68 வயது மூதாட்டி ஒருவருக்கு மேற்பட்ட காதலானது திருமணத்தில் முடிந்துள்ளது. இந்த சுவாரஸ்ய காதல் கதையை பற்றி தெரிந்து கொள்வோம். கேரள மாநிலம் கொச்சியை எடுத்த காக்காநாடு என்ற பகுதியை சேர்ந்த வர்க்கீஸ் என்பவருக்கு 73 வயது ஆகின்றது. இவர் கேட்டரிங் உரிமையாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி மூன்று மகன்கள் உள்ள நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி இறந்து விட்டார்.
மகன்களும் திருமணமாகி வெவ்வேறு மாநிலங்களில் வசித்து வருகின்றனர். இவர் மட்டும் கேட்டரிங் தொழிலை பார்த்துக்கொண்டு தனியாக வசித்து வருகிறார். ஊரடங்கு சமயத்தில் வீட்டில் தனியாக முடங்கிக் கிடந்துள்ளார். அப்போது கொரோனா பரிசோதனை நடத்தி தடுப்பூசி போடும் முகாம்கள் கொச்சினில் நடைபெற்றது. அந்த பரிசோதனை முகாமுக்கு இவர் சென்றுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த அஸ்வதி என்ற பெண்ணை சந்தித்துள்ளார். அவருக்கும் திருமணமாகி மகள் உள்ள நிலையில், இவரது கணவரும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார்.
மகளுக்கு திருமணமாகி வேறு இடத்தில் இருக்கிறார். இவரும் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். பின்னர் இருவரும் சந்தித்துக் கொண்டு ஒருவருக்கு ஒருவர் பேசி பழகி ஆறுதல் கூறி வந்துள்ளனர். இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளன. இதுகுறித்து தனது மகன், மகளிடம் கேட்டுள்ளனர். அவர்களும் இதற்கு சம்மதம் தெரிவிக்கவே, வர்க்கீஸ், அஸ்வதி திருமணம் எளிமையாக உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்று முடிந்தது.