முதியோர் இல்லத்தில் முக கவசம் அணிந்து கொள்ளாத ஊழியர்களால் ஆறு முதியவர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்து நாட்டில் Obwalden மாநிலத்தில் அக்டோபர் 8 ஆம் தேதியில் இருந்து முதியோர் இல்லம் ஒன்றில் ஆறு முதியவர்கள் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் தற்போது அந்த முதியோர் இல்லம் மூடப்பட்டுள்ளதாக அதன் இணைய பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்பால்தான் 6 முதியவர்களும் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டு இருந்தாலும் அவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் விரிவான அறிக்கை சமர்ப்பிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் முதியோர் இல்லத்தில் பணியாற்றும் ஊழியர்கள் முக கவசம் அணிந்து கொள்ளாமல் இருந்தது தெரியவந்துள்ளது. ஆனால் முதியோர் இல்லத்தின் நிர்வாகிகள் தங்களது ஊழியர்களுக்கு ஆதரவு அளிப்பதோடு தேவைப்படும் நிலையில் ஊழியர்கள் முக கவசம் அணிந்து கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக அந்நாட்டில் உள்ள சுகாதார ஊழியர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து பணியாற்ற வேண்டும் என அந்நாட்டு அரசு வலியுறுத்தியுள்ளது. மேலும் முக கவசம் கட்டாயம் இல்லை என எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை. குறிப்பாக இறந்த ஆறு முதியவர்களில் இரண்டு பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.