பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம், கொலையா அல்லது தற்கொலையா என்பதை, சிபிஐ தெளிவுபடுத்த வேண்டும் என மகாராஷ்ட்ரா உள்துறை அமைச்சர் திரு.அனில் தேஷ்முக் வலியுறுத்தியுள்ளார்.
பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புத், கடந்த ஜூன் 14-ம் தேதி, மும்பையில் உள்ள அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தரப்பிலும் புகார் எழுந்த நிலையில், சுஷாந்த் மரண வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் நடிகை ரியா சர்க்கரபோர்த்தி மற்றும் அவரது சகோதரர் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், மகாராஷ்ட்ரா உள்துறை அமைச்சர் திரு.அனில் தேஷ்முக், சுஷாந்த்சிங் மரண வழக்கில், விசாரணையின் நிலை குறித்து, சிபிஐ அறிக்கை வெளியிட வேண்டும் என தெரிவித்தார். வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டு 6 மாதங்கள் ஆன நிலையில், இதுவரை எந்தவித தகவலும் வெளியிடப்படவில்லை என்றும், சுஷாந்த்சிங் மரணம் கொலையா அல்லது தற்கொலை என சிபிஐ பொதுவெளியில் வெளிப்படுத்த வேண்டும் என்றும் திரு.அனில்தேஷ்முக் வலியுறுத்தினார்.