மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோவில் மக்கள் குவிந்திருந்த ஒரு ஓட்டலில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பெனி நகரில் உள்ள ஒரு பிரபலமான ஓட்டலில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ஓட்டலுக்குள் நுழைய முயன்ற தற்கொலைதாரியை காவல்துறையினர் தடுத்துள்ளனர். இருந்த போதிலும் அவன் நுழைவு வாயிலிலே தன்னைத்தானே வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்தியுள்ளான்.
இதில் தற்கொலைதாரி உட்பட சம்பவ இடத்திலேயே 6 பேர் பலியாகினர். மேலும் 13 பேர் காயமடைந்துள்ளனர். ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பில் உள்ள Allied Democratic Forces என்ற போராளிகள் குழு தான் இந்த தற்கொலை தாக்குதலுக்கு காரணம் என்று அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இருந்தபோதிலும் தற்போது வரை இந்த தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை. இந்த தாக்குதலின்போது ஓட்டலுக்குள் பெண்கள் குழந்தைகள் என 30-க்கும் மேற்பட்டோர் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.