இந்திய அணிக்கு எதிராக 6 பந்துகளில் 6 சிக்ஸர் அடிப்பேன் என்று கூறிய ஜிம்பாப்வே வீரர் ரியான் பர்ல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து கிண்டலுக்கு உள்ளாகியுள்ளார்.
இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரின் முதல் போட்டி நேற்று ஹராரே மைதானத்தில் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கேல்.ராகுல் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணியால் இந்திய பந்துவீச்சாளர்களின் தாக்குதலில் நிலைத்து நிற்க முடியவில்லை. இறுதியில் ஜிம்பாப்வே அணி 40.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 189 ரன்களில் சுருண்டு போனது.
இதையடுத்து களம் இறங்கிய இந்திய அணி 30.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 192 ரன்கள் எடுத்து எளிதாக வென்றது. தவான் 113 பந்துகளில் 81 ரன்களும் (9 பவுண்டரி), சுப்மன் கில் 72 பந்துகளில் 82 ரன்களும் (10 பவுண்டரி, 1 சிக்ஸர்) எடுத்திருந்தனர். இந்த வெற்றியின் மூலம் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இந்தப் போட்டிக்கு முன்னதாக இந்திய அணிக்கு எதிராக 6 பந்துகளில் 6 சிக்ஸர் அடிப்பேன் என்று ஜிம்பாப்வே வீரர் ரியான் பர்ல் தெரிவித்திருந்தார். ஆனால் இவர் இந்த போட்டியில் 18 பந்துகளை எதிர் கொண்டு 2 பவுண்டரிகள் உட்பட 11 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார்.. சவால் விட்டு விட்டு அவர் இப்படி சொற்ப ரன்களிலேயே பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் ஆட்டம் இழந்து பரிதாபமாக வெளியேறினார். இந்தியா அணிக்கு எதிராக 6 பந்துகளில் 6 சிக்ஸர் அடிப்பேன் என்று கூறிவிட்டு இப்படி சொற்பரன்களில் ஆட்டம் இழந்து விட்டார் என்பதால் அனைவரது மத்தியிலும் கேலிக்கு உள்ளாகி உள்ளார்.
ஏற்கனவே அவர் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் ஒரே ஓவரில் 5 சிக்சர் மற்றும் 1 பவுண்டரியை அடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.