வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்ப 50,000 தமிழர்கள் விண்ணப்பம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமேரிக்கா, சிங்கப்பூர், துபாய் உட்பட சுமார் 100 நாடுகளில் பணிபுரியும் தமிழர்கள் இந்தியா திரும்ப இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர். முன்னதாக, வெளிநாடுகளில் தங்கியிருக்கும் தமிழர்கள் நாடு திரும்ப பிரத்யேக இணையதள முகவரியை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. http://nonresidenttamil.org என்ற இணைய தளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தியுள்ளது.
இதையடுத்து, இந்தியா திரும்ப வெளிநாடுகளில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் பதிவு செய்துள்ளனர். அதில், தமிழகத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பல்வேறு நாடுகளில் இருந்து தமிழகம் திரும்ப வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர். எனவே, முதற்கட்டமாக பல்வேறு நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்படும் போது, தமிழகத்திற்கு மட்டும் 4 விமான சேவைகள் இயக்கப்படும் எனவும், துபாயில் இருந்து 2 விமான சேவைகள் சென்னை வந்து சேரும் எனவும், மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து 2 விமானங்கள் சென்னை மற்றும் திருச்சி வந்து சேரும் என்றும் மத்திய விமானத்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், தமிழகம் திரும்ப சுமார் 50,000 வெளிநாடு வாழ் தமிழர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதில், முதற்கட்டமாக நாளை மறுதினம் மலேசியாவில் இருந்து சுமார் 200 பேர் தமிழகம் அழைத்துவரப்பட உள்ளதாக தமிழக அரசு தகவல் அளித்துள்ளது. மேலும் விமான கட்டணம் மற்றும் தனியார் ஹோட்டலில் தனிமைப்படுத்துதலுக்கான கட்டணத்தை நாடு திரும்புவோரே ஏற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.