கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இருந்தாலும் ரயில்வே வளாகத்திலும் ரயில்களிலும் பயணிகள் கொரோனா கட்டுப்பாட்டு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி ரயில் பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இதனை மீறினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் எச்சரிக்கை அறிவிப்பை விடுத்துள்ளது. கொரோனா பாதிப்பு குறையாத நிலையில், முக கவசம் இல்லாமல் பயணிகள் அலட்சியமாக ரயிலில் பயணம் செய்கின்றனர். இதனால் மீண்டும் கொரோனா பரவும் சூழல் ஏற்பட்டுள்ளதால் அபராதம் விதிக்கப்படும் என்ற ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது.