பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை சட்டவிரோத அமைப்பாக மத்திய அரசு அறிவித்து இருக்கிறது.
மத்திய மத்திய உள்துறை அமைச்சகம் ”பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா” -வுக்கு 5 வருடங்களுக்கு தடை விதித்து இருக்கிறது. ”பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா” சட்டவிரோத இயக்கம் என அரசாணையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக ”பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா” இனி இந்தியாவில் செயல்பட முடியாது என்கின்ற ஒரு சூழல் உருவாகியுள்ளது. சென்ற வாரம் நாடு முழுவதும் தேசிய பாதுகாப்பு முகமை மற்றும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி இருந்தனர். அந்த சோதனையிலே ”பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா” அலுவலகங்கள் மற்றும் அதன் பொறுப்பாளர்களுக்கு தொடர்புள்ள இடங்களிலே சோதனை நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து நேற்று 8 மாநிலங்களிலே மாநில போலீசார் சோதனையை நடத்தினர். இந்த சோதனைகளிலே பல்வேறு ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும், ”பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா” தேசியவிரோத செயல்களில் ஈடுபட்டதற்கான சான்றுகள் இருப்பதால், அந்த அமைப்பு தற்போது தடை செய்யப்பட்டிருப்பதாகவும் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது அரசாணைப்படி UAPA ( Unlawful Activities (Prevention) Amendment Act) என்று சொல்லப்படும் சட்டத்தின் கீழ் இந்த தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
ஆகவே ஐந்தாண்டுகளுக்கு இந்த தடை தொடரும். ”பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா” எந்த விதமான நடவடிக்கைகளிலும் ஈடுபட முடியாது. CAA சட்டத்திற்கு எதிரான போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் கலவரத்தை தூண்டும் வகையிலே, வன்முறையை தூண்டும் வகையிலே ”பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா” நடவடிக்கைகளை எடுத்தது என்றும், பிரதமர் நரேந்திர மோடி மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டது என்றும் பல்வேறு குத்துச்சாட்டுகள் ”பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா” -விற்கு எதிராக வைக்கப்பட்டுள்ளன. இதை தவிர சட்டவிரோதமாக பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டது என்ற குற்றச்சாட்டும் இந்த அமைப்பின் மீது வைக்கப்பட்டுள்ளது. ஆகவே பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி மத்திய உள்துறை அமைச்சகம் ”பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா” -வுக்கு 5 வருடங்கள் தடை விதித்துள்ளது.