அமெரிக்காவில் ஒரு ஆண் உட்பட ஐந்து குழந்தைகளை சுட்டுக் கொன்ற இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவின் ஒக்லஹோமா மாகாணம் மஸ்கோஜியில் உள்ள குடியிருப்பு பகுதியில் நேற்றுக்காலை தொடர்ச்சியாக துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டுள்ளது. சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் குடியிருப்பு பகுதியை சோதனையிட்டனர்.
அப்போது அங்கு உள்ள ஒரு குடியிருப்பில் ஒரு ஆண் உட்பட 5 குழந்தைகள் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதை கண்டறிந்தனர். ஆறு பேரை சுட்டுக் கொன்ற 25 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர். அதன்பின் அவரிடம் இருந்து துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். இளைஞனிடம் நடந்த விசாரணையில் தனது சொந்த சகோதரியின் குடும்பத்தை படுகொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. அவரது சகோதரியும் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார்.