Categories
கிரிக்கெட் விளையாட்டு

”5 பேர் டக் அவுட் … 3 பேர் 1 ரன்”…. 41 ரன்னில் ALL OUT …. இந்தியாவிடம் வீழ்ந்த ஜப்பான் …!!

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 11ஆவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜப்பானை வீழ்த்தியது.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றுவருகிறது. இன்று நடைபெற்ற இந்தத் தொடரின் 11ஆவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, கத்துக்குட்டியான ஜப்பான் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ப்ரியம் கார்க் முதலில் ஜப்பான் அணியை பேட்டிங் செய்ய பணித்தார்.

India vs Japan

இப்போட்டியை அவர் விரைவில் முடித்திட வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த முடிவை எடுத்தாரோ என்று தெரியவில்லை. ஜப்பான் அணியின் பேட்ஸ்மேன்களின் பெயர் நினைவில் வைப்பதற்குளேயே அனைவரும் வரிசையாக அவுட்டாகினர்.

1,7,0,0,0,0,0,7,5,1,1 இது ஏதோ டெலிஃபோன் நம்பரோ அல்லது டிரான்சாக்ஷன் ஐடி நம்பரோ என நினைக்க வேண்டாம். இது ஜப்பான் வீரர்கள் எடுத்த ஸ்கோர்.

அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டனும் விக்கெட் கீப்பருமான மார்கஸ் துர்கேட் முதல் ரன்னில் கார்த்திக் தியாகி பந்துவீச்சில் போல்டாக, அவரைத் தொடர்ந்து வந்த நீல் டேட் அடுத்த பந்திலேயே டக் அவுட்டானார். இதனால், ஜப்பான் அணி 4.4 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழந்து ஐந்து ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.

இப்படி ஆட்டத்தின் தொடக்கம் முதல் இறுதிவரை ஜப்பான் அணிக்கு சோதனையாகவே அமைந்தது. ஒருக்கட்டத்தில் 19 ரன்களுக்கு ஏழு விக்கெட்டை இழந்த ஜப்பான் அணி எப்படியோ தட்டுத்தடுமாறி 22.5 ஓவர்களில் 41 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில், அணியின் மற்றொரு தொடக்க வீரர் ஷூ நோகுச்சி, ஆல்ரவுண்டர் கென்டோ டோபேல் ஆகியோர் தலா ஒரு பவுண்டரி உட்பட ஏழு ரன்களில் ஆட்டமிழந்தனர். ஜப்பான் அணி சார்பில் இந்த இரண்டு வீரர்கள் அடித்த ரன்களே அதிகபட்ச ஸ்கோராகும்.

இதில் நீல் டேட், தேபாசிஷ் சஹோ, கசுமசா தகாஹாஷி இஷான் ஃபர்டைல், ஆஷ்லி துர்கேட் என ஐந்து வீரர்களும் ஒருவருக்கு பின் ஒருவராக டக் அவுட்டாகினர். இப்போட்டியில் 15 பந்துகளை எதிர்கொண்டும் தேபாசிஷ் சஹோவால் ஒரு ரன்கூட அடிக்க முடியாமல் போனது வேடிக்கையா அல்லது இந்திய பந்துவீச்சாளர்கள் இப்போட்டியில் 19 ரன்களை உதிரயாக வழங்கியது வேடிக்கையா என்று தெரியவில்லை.

ஜப்பான் அணியில் ஐந்து வீரர்கள் டக் அவுட் ஆனதைத் தவிர, ஏனைய ஆறு வீரர்கள் ஒற்றை இலக்கு ரன்னில் அவுட்டாகினர். இப்போட்டியில் ஜப்பான் அணி 41 ரன்களுக்கு ஆல் அவுட்டானதன் மூலம், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை வரலாற்றில் இரண்டாவது குறைந்த ஸ்கோரை அந்த அணி பதிவு செய்தது.

இந்திய அணி தரப்பில் ரவி பிஷ்னோய் நான்கு, கார்த்திக் தியாகி மூன்று, ஆகாஷ் சிங் இரண்டு, வித்யாதார் படில் ஒரு விக்கெட்டை எடுத்தனர். இதைத்தொடர்ந்து, களமிறங்கிய இந்திய அணி டீ குடித்துவிட்டு வருவதற்குள்ளாகவே ஆட்டத்தை முடித்துவிட்டது. அணியின் தொடக்க வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 29 ரன்களிலும், குமார் குஷாக்ரா 13 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருக்க இந்திய அணி 4.5 ஓவர்களிலேயே 10 விக்கெட் வித்தியாசத்தில் ஜப்பானை வீழ்த்தியது.

இப்போட்டியில் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றிய ரவி பிஷ்னோய் ஆட்டநாயகன் விருதை பெற்றார். இதைத்தொடர்ந்து, வரும் 24ஆம் தேதி நடைபெறவுள்ள 20ஆவது லீக் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை எதிர்கொள்ள இருக்கிறது.

Categories

Tech |