பப்புவா நியூ கினியாவில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதில் இடிபாடுகளில் மாட்டி, தற்போது வரை ஐந்து பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பப்புவா நியூ கினியாவில் இருக்கும் லே என்ற மிகப்பெரும் துறைமுக நகரில் இருந்து சுமார் 65 கிலோ மீட்டர் தூரத்தில் மிகப்பெரிய நிலநடுக்கம் நேற்று உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் 7.7 என்ற அளவில் ரிக்டரில் பதிவாகியிருந்ததாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
நிலநடுக்கத்தில், கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பதறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர். எனினும், சிலர் இடிப்பாடுகளில் மாட்டிக் கொண்டு காயமடைந்திருக்கிறார்கள். மேலும், இதில் ஐந்து நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நெடுஞ்சாலைகள், குடியிருப்புகள், சுகாதார நிலையங்கள் மற்றும் கிராமப்புற சாலைகள் சேதமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சேதமடைந்த பகுதிகளில் மின்சார உட்கட்டமைப்பும் பாதிப்படைந்ததால், கிழக்கு பகுதியில் முற்றிலுமாக மின்வெட்டு ஏற்பட்டது.