கேரளாவின் கண்ணூர் மாவட்டம் பானூர்பகுதியை சேர்ந்த வினோத் என்பவர் வெளிநாட்டில் பணியாற்றுகிறார். இவருக்கு விஷ்ணுபிரியா(23) என்ற மகள் இருந்தார். இவர் தனியார் மருத்துவமனையில் மருந்தாளுனராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் மதியம் வீட்டில் தனியாக இருந்த விஷ்ணுபிரியா படுக்கையறையில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் ரத்தவெள்ளத்தில் சடலமாக கிடந்தார். இதையடுத்து காவல்துறையினர் விஷ்ணுபிரியாவின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் விஷ்ணுபிரியா வீட்டிலிருந்து முகமூடி அணிந்த ஒருவர் வெளியே செல்வதை பார்த்ததாக அப்பகுதியினர் காவல்துறையினரிடம் கூறினர். அதன்பின் விஷ்ணு பிரியாவின் செல்போனில் இருந்த விபரங்களை காவல்துறையினர் பரிசோதித்தனர். இவற்றில் கூத்துபரம்பு மானந்தேரி பகுதியை சேர்ந்த சியாம்ஜித் (23) என்பவரின் நம்பர் இருந்தது. இதனால் காவல்துறையினர் ஷியாம்ஜித்திடம் விசாரித்தனர். அப்போது விஷ்ணு பிரியாவை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறியிருப்பதாவது, கல்லூரி படிப்பை முடித்துள்ள சியாம்ஜித் அந்த பகுதியில் தந்தை நடத்திவரும் ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். சென்ற 5 ஆண்டுகளாக விஷ்ணுபிரியாவை சியாம்ஜித் காதலித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் விஷ்ணு பிரியாவுக்கு பொன்னானி பகுதியைச் சேர்ந்த வேறொரு வாலிபருடன் தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இவ்விபரம் சியாம்ஜித்துக்கு தெரியவந்தது. இதன் காரணமாக இவர்களுக்கு இடையில் தகராறு ஏற்பட்டு இருக்கிறது. அதன்பின் சியாம்ஜித்துடன் பேசுவதை விஷ்ணுபிரியா நிறுத்தினார். இதனால் விஷ்ணுபிரியா மீதும், அவருடன் நெருக்கமாக இருக்கும் பொன்னானி வாலிபர் மீதும் ஷியாம் ஜித்துக்கு கோபம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக முதலில் விஷ்ணுபிரியாவையும், பின் அந்த வாலிபரையும் கொலை செய்ய தீர்மானித்தார்.
இதற்காக ஷியாம் ஜித் ஒரு கத்தியையும், சுத்தியலையும் வாங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை விஷ்ணுபிரியாவின் வீட்டுக்கு சென்றபோது வீட்டில் வேறு யாருமில்லை. இச்சமயத்தில் விஷ்ணுபிரியா பொன்னானி வாலிபருடன் போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது ஷியாம்ஜித்தை பார்த்ததும் விஷ்ணுபிரியா சத்தமிட்டுள்ளார். எனினும் கண்ணிமைக்கும் நேரத்தில் ஷியாம்ஜித் சுத்தியலால் அவரது தலையில் பலமாக அடித்ததோடு, பின் சரமாரியாக வெட்டியுள்ளார். அத்துடன் கத்தியால் கழுத்தை அறுத்துள்ளார். இதன்பின் ஷியாம்ஜித் உடனடியாக வீட்டைவிட்டு வெளியேறி, பைக்கில் வீட்டுக்கு சென்று குளித்துள்ளார். அதன்பின் வழக்கம்போல் தந்தையின் கடையில் இருந்தபோது தான் காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.
இவ்வாறு விஷ்ணுபிரியாவை கொலை செய்த பிறகு அவர் சிக்கி இருக்காவிட்டால் பொன்னானி வாலிபரையும் சியாம்ஜித் கொலை செய்திருப்பார் என காவல்துறையினர் தெரிவித்தனர். இதனிடையில் விஷ்ணுபிரியாவின் உடல் கண்ணூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது விஷ்ணுபிரியாவின் உடலில் 18 காயங்கள் இருந்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து பிரேத பரிசோதனைக்குப் பிறகு விஷ்ணுபிரியாவின் உடல் அவரது வீட்டுத்தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. விசாரணைக்குப் பிறகு காவல்துறையினர் சியாம்ஜித்தை தலச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைச்சாலையில் அடைத்தனர்.