துணை போலீஸ் சூப்பிரண்டு கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அருகே புன்னை நகர் பகுதியில் சிவகுரு குற்றாலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜவுளி கடை வைத்து நடத்தி வருகிறார். இவரிடம் வெள்ளிச்சந்தை பகுதியைச் சேர்ந்த 2 பேர் ஒரு நிலத்தை விற்பனை செய்துள்ளனர். இதற்காக ரூ 1.5 கோடி பணத்தை சிவகுரு குற்றாலம் கொடுத்துள்ளார். இவர்கள் பணத்தைப் பெற்றுக் கொண்டு நிலத்தை எழுதி கொடுக்காமல் சிவகுரு குற்றாலத்தை மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து சிவகுரு குற்றாலம் நாகர்கோவில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த வழக்கை துணை போலீஸ் சூப்பிரண்டு தங்க வேலு விசாரித்து வந்தார். இதற்காக சிவகுரு குற்றாலத்திடம் போலீஸ் சூப்பிரண்டு ரூபாய் 10 லட்சம் பணம் கேட்டுள்ளார். ஆனால் நிலத்தை வாங்கியவர்கள் சிவகுரு குற்றாலத்திடம் தானாக முன்வந்து நிலத்தை எழுதி கொடுத்துள்ளனர்.
இதையறிந்து கொண்ட துணை போலீஸ் சூப்பிரண்டு சிவகுரு குற்றாலத்திடம் லஞ்சம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து சிவகுரு குற்றாலம் லஞ்ச ஒழிப்பு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிவகுரு குற்றாலத்திடம் ரூபாய் 5 லட்சம் பணத்தை கொடுத்து போலீஸ் சூப்பிரண்டிடம் கொடுக்குமாறு கூறினர். அதன்படி சிவகுரு குற்றாலம் 5 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்றுள்ளார். இவர் பணத்தை அதிகாரியிடம் கொடுக்கும் போது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மறைந்திருந்து கையும் களவுமாக பிடித்தனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.