மது அருந்துபவர்களின் எண்ணிக்கை மற்ற மாநிலங்களை விட கேரளாவில் அதிகமாக உள்ளது.
கேரள மாநிலத்தில் மது அருந்துபவர்களின் எண்ணிக்கை மற்ற மாநிலங்களை விட மிக அதிகம். இங்கு சுமார் தினமும் 30 லட்சம் பேர் மது அருந்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் 27 லட்சம் ஆண்களும், மூன்று லட்சம் பெண்களும் மது அருந்துவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விசேஷ தினங்கள் இங்கு மது அருந்துவோரின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். ஆண்டுதோறும் ஓணம் பண்டிகையை ஒட்டி மது விற்பனை மிக அதிகமாக இருக்கும். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக ஓணம் பண்டிகையின் போது மது விற்பனை அதிக அளவில் நடைபெறவில்லை. ஆனால் இந்த ஆண்டு மது விற்பனை அமோகமாக நடக்கிறது.
இந்நிலையில் ஓணம் பண்டிகை தொடங்கிய முதல் 5 நாட்களில் மட்டுமே மாநிலம் முழுவதும் சுமார் 30 சதவீதம் மது விற்பனை அதிகமாக இருப்பதாக மாநில மது விற்பனை கழகத்தின் நிர்வாக இயக்குனர் யோகேஷ் குப்தா கூறியுள்ளார். மேலும் இது குறித்து அவர் கூறியதாவது. கடந்த ஆண்டு ஓனம் பண்டிகையின் போது மது விற்பனையின் மூலம் 561 கோடி ரூபாய் மட்டுமே கிடைத்தது. ஆனால் தற்போது தொடங்கிய முதல் 5 நாளிலேயே 324 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இதனால் ஓனம் பண்டிகை முடிவதற்குள் மது விற்பனை 700 கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஆண்டு 96 மது விற்பனை கூடங்கள் புதிதாக திறக்கப்பட்டு உள்ளது. இந்த கடைகளின் மூலம் வருமான மேலும் அதிகரிக்கும் என அவர் கூறியுள்ளார்.