மனைவியை கொலை செய்துவிட்டு பிணத்தை மூட்டையில் கட்டி வைத்த விவசாயியை போலீசார் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அடுத்துள்ள தனிப்பாறை பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகின்றார். விவசாயியான இவருக்கு அம்சகொடி என்ற மனைவியும், மணிமாறன் என்ற மகனும் உள்ளார். மேலும் மணிமாறன் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருவதால் கணேசனும், அம்சகொடியும் அவர்களது தோட்டத்து வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் கணேசனுக்கு மதுப்பழக்கம் இருப்பதால் அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து கடந்த 5 நாட்களுக்கு முன்பு கணேசன் வழக்கம்போல மது போதையில் வீட்டுக்கு வந்து அம்சகொடியுடன் தகராறில் ஈடுபட்டார். அப்போது ஆத்திரமடைந்த கணேசன் வீட்டில் இருந்து விறகு கட்டையை எடுத்து மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் அன்னக்கொடி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனைதொடர்ந்து கணேசன் மனைவியின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி வைத்துவிட்டு உறவினர்களிடம் அன்னக்கொடி தன்னுடன் சண்டை போட்டு வீட்டை விட்டு சென்று விட்டதாக கூறி நடித்துள்ளார்.
இதற்கிடையே சாக்குமூட்டையில் கட்டி வைத்த அம்சக்கொடியின் உடல் துர்நாற்றம் வீசத் தொடங்கியதை அடுத்து காவல்துறையிடம் மாட்டிக் கொள்வோமோ என்ற அச்சத்தில் கணேசன் அவரது உடலை புதைக்க முயன்றார். அதற்காக அன்னக்கொடியின் உடலை வீட்டில் இருந்து தோட்டத்தில் உள்ள கோழிகளை அடைத்து வைக்கும் கூண்டிற்கு கொண்டு வந்தார். அப்போது அப்பகுதியில் துர்நாற்றம் வீசியதால் அக்கம்பக்கத்தில் இருந்த அவரது உறவினர்கள் சந்தேகம் அடைந்து கணேசனின் வீட்டுக்கு சென்றுள்ளனர்.
இதனைதொடர்ந்து கோழிக்கூண்டில் அதிக துர்நாற்றம் வீசியதால் அங்கு சென்று பார்த்தபோது அன்னக்கொடியின் உடல் அழுகிய நிலையில் இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக மயிலாடும்பாறை காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அன்னக்கொடியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மனைவியை கொலை செய்த கணேசனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.