விழுப்புரம் அருகே சேமிப்பு உள்ளிட்ட கணக்குகளில் மக்கள் சேர்த்து வைத்து கொண்டிருந்த பணத்தில் ரூ4,87,891 கையாடல் செய்த ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் கப்பூரில் உள்ள அஞ்சல் நிலையத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உயர் அதிகாரிகள் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கே அலுவலராக பணியாற்றி வந்த அருள் என்பவர் பொது மக்களின் சேமிப்புக் கணக்கு, கிராமிய அஞ்சல் காப்பீட்டு கணக்கு, தொடர் வைப்பு கணக்கு, செல்வமகள் கணக்கு உள்ளிட்ட அனைத்து வழக்குகளில் இருந்தும் மொத்தம் ரூபாய் 4 லட்சத்து 87 ஆயிரத்து 871 ரூபாயை கையாடல் செய்திருந்தார்.
இதனை கண்டுபிடித்த அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டு அவரை பணியிடை நீக்கம் செய்தனர். மேலும் கையாடல் செய்த பணத்துடன் கூடுதலாக 40,000 அபராதமாக செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் ஒரு லட்சத்து 89 ஆயிரத்து 450 ரூபாயை அதிகாரிகளிடம் கொடுத்தவர், மீதமுள்ள தொகையான 3 லட்சத்து 39 ஆயிரத்து 490 ரூபாயை இத்தனை காலமாக தராமல் இழுத்தடித்து வந்ததுடன் திடீரென தலைமறைவாகினார். இதனால் கோபமடைந்த உதவி கோட்ட கண்காணிப்பாளர் காவல் நிலையத்தில் அருள் மீது புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்த காவல்துறையினர் செஞ்சி அருகே அவரை மடக்கிப்பிடித்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.