மும்பையில் 46 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு கன மழை பதிவாகி உள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பரவிக் கொண்டிருக்கும் நிலையில், மும்பையில் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. மும்பையில் இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்து கொண்டிருக்கும் கனமழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. தெற்கு மும்பையில் கொலாபா பகுதியில் 46 வருடங்களாக இல்லாத அளவிற்கு நேற்று மழை பெய்துள்ளது. இதனைத்தொடர்ந்து அடுத்த சில மணி நேரங்களுக்கும் கன மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதனால் மக்கள் எவரும் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று முதல் மந்திரி உத்தவ் தாக்கரே எச்சரித்துள்ளார். கேட்வே ஆப் இந்தியா பகுதியில் இருந்து தொடங்கக் கூடிய மும்பையின் தெற்குப் பகுதியில் இருக்கின்ற கொலாபா பகுதியில் நேற்று ஒரே நாளில் மட்டும் 333.8 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இது 1974ஆம் ஆண்டிற்கு பின்னர் ஆகஸ்ட் மாதத்தில் ஒரே நாளில் பெய்த மிக அதிக கன மழை ஆகும். மும்பையில் ஆகஸ்ட் மாதத்தில் பெய்ய வேண்டிய மழையில் 64% முதல் 5 நாட்களிலேயே பெய்துவிட்டது.