மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி வரி இழப்பீடு வழங்குவது குறித்து விவாதிக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மீண்டும் இன்று நடைபெறுகிறது.
ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை அமல்படுத்தியதன் காரணமாக ஏற்பட்டுள்ள இழப்பீட்டை பகிர்ந்தளிப்பது மாநிலங்களுக்கும் மத்திய அரசிற்கும் இடையே பிரச்சினை நிலவி வருகிறது. ஜிஎஸ்டி அமல்படுத்திய வகையில் நடப்பு நிதி ஆண்டில் மாநிலங்களுக்கு மத்திய அரசு 2 லட்சத்து 35 ஆயிரம் கோடி ரூபாயை மொத்த இழப்பீடாக வழங்க வேண்டி உள்ளது. தங்களுக்கு உரிய ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று பல மாநிலங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமையில் மாநில நிதி அமைச்சர்கள் அடங்கிய 43வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று கூடுகிறது. இதில் ஜிஎஸ்டி இழப்பீடு விவகாரம் தொடர்பாக பாஜகவிற்கு எதிரான கட்சிகள் ஆளும் மாநிலங்களின் கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.