உக்ரைன் நாட்டில் தேடப்பட்டு வந்த 4 வயதுடைய சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
உக்ரைன் நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதியன்று ரஷ்ய படைகள் போர் தொடுக்க தொடங்கியது முதல் தற்போது வரை மக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். பலர் தங்கள் குடும்பத்தினரையும் உறவினர்களையும் இழந்து தவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், அந்நாட்டின் தலைநகர் கீவில் இருக்கும் ஒரு கிராமத்தை சேர்ந்த Sasha என்ற 4 வயதுடைய சிறுவன் கடந்த மாதம் 10ஆம் தேதி அன்று தன் பாட்டியுடன் படகில் தப்பிக்க முயற்சித்திருக்கிறார்.
அப்போது சிறுவர் மாயமானார். எனவே, நாடு முழுக்க தேடுதல் வேட்டை நடைபெற்றது. இந்நிலையில், ரஷ்ய படையினர் சிறுவன் மற்றும் அவரின் பாட்டியை சுட்டுக் கொலை செய்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சிறுவனின் தாயார் இதுபற்றி தெரிவித்ததாவது, எங்களுடைய குட்டி தேவதை சொர்க்கத்தில் இருக்கிறார்.
அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அவரை தேடுவதற்கு உதவி புரிந்த அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்திருக்கிறார். மேலும், என் மகனுடன் சென்ற மாமியாரின் சடலம் கிடைக்கவில்லை என்று கூறியிருக்கிறார். இந்த இழப்பை எப்போதும் மறக்க முடியாது. மன்னிக்கவும் முடியாது என்று உக்ரைன் நாடாளுமன்றம் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறது.