கிடப்பில் போடப்பட்ட சாலை திட்ட பணிகளை மீண்டும் நெடுஞ்சாலைத்துறையினர் தீவிரமாக தொடங்கியுள்ளனர்.
விழுப்புரம் – நாகப்பட்டினம் செல்லும் 194 கிலோ மீட்டர் தூர தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழி சாலையாக மாற்றுவதற்கு கடந்த 2012-ஆம் ஆண்டு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த திட்டத்தில் விழுப்புரத்தில் உள்ள ஜானகிபுர கூட்டுச் சாலையிலிருந்து நாகப்பட்டினம் புறவழிச்சாலை தொடங்குவதாக அமைந்துள்ளது. இந்த சாலை விழுப்புரத்தில் 16, கடலூரில் 61, நாகையில் 43 மற்றும் புதுச்சேரியில் 14 என மொத்தமாக 134 கிராமங்களின் வழியாக அமைகிறது.
எனவே 4 வழிச்சாலை திட்டத்திற்காக நிலத்தை கையகப்படுத்தும் பணியானது 2010-ஆம் ஆண்டு தொடங்கி உள்ளது. மேலும் இந்த திட்டத்திற்காக மத்திய அரசு 6000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கிடையில் விழுப்புரம் – புதுச்சேரி மாநில எல்லைவரை உள்ள 29 கிலோமீட்டர் சாலையை சீரமைக்கும் பணியானது கடந்த வருடம் 2019-ல் தொடங்கியுள்ளது. இதனையடுத்து 4 வழிச்சாலை திட்டத்தில் நிலம் கையகப்படுத்துவதில் 4 ஒப்பந்ததாரர்களுக்கு வேலைகள் பிரித்துக் கொடுக்கப் பட்டுள்ளது.
ஆனால் சுற்றுச்சூழல் அனுமதி பெறவில்லை மற்றும் மக்களிடம் கருத்து கேட்கவில்லை என பிரச்சனைகள் எழுந்ததால் இடைக்காலத்தடை விதிக்கப்பட்டு பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இப்போது இந்த வழக்கில் இடைக்கால தடை ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே நிலம் கையகப்படுத்தும் பணியினை தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் ஜூலை மாதம் முதல் செய்து வருகின்றனர்.
அதன்படி கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் இருக்கும் இடர்பாடுகளை அகற்றி அதனை அளவீடு செய்யும் பணி நடந்து வருகிறது. விழுப்புரம் – புதுச்சேரி சாலையில் எம்.என்.குப்பம் – மதுரை மதகடிப்பட்டு வரையான சாலையில் இருந்த நிலங்கள், மனைகள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் அந்த இடங்களில் உள்ள வணிகவளாகங்கள், கட்டிடங்கள், வீடுகள், கடைகள் போன்றவை பொக்லைன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்தப்பட்டு சாலையை சமன்படுத்தும் பணி நடந்து வருவதாகவும், இது முடிந்ததும் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட இருப்பதாகவும் நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.