தென்காசியில் வனத்துறை அதிகாரி தாக்கியதால் உயிரிழந்ததாக கூறப்படும் விவசாயி முத்துவின் உடலில் சந்தேகிக்கும் விதமாக நான்கு காயங்கள் இருப்பதாக மதுரை உயர்நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பாக தென்காசியில் விவசாயியாக வேலை பார்த்து வந்த முத்து என்பவரை வனத்துறை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். பின் அவர் மர்மமான முறையில் இறந்து விட்டதாக வீட்டிற்கு தகவல் வந்தது. இதையடுத்து முத்துவின் மனைவி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தனது கணவர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அதற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்ற வனத்துறை அதிகாரிகள் தான் காரணம் எனவும் வழக்கு தொடர்ந்தார்.
தற்போது தென்காசியில் வனத்துறை அதிகாரி தாக்கியதில் உயிரிழந்ததாக சொல்லபப்டும் முத்துவின் உடலில் நான்கு இடங்களில் காயம் இருந்ததாக பிரேத பரிசோதனை ரிப்போர்ட் கூறுவதாக உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. மேலும் அவரது மனைவி தொடர்ந்த வழக்கிற்கான முக்கிய உத்தரவை நாளை நீதிமன்றம் வழங்க உள்ளது. முத்துவின் மனைவி தொடர்ந்த வழக்கில் வனத்துறை அதிகாரி மீது கொலை வழக்கு பதிவு செய்யவும், உரிய இழப்பீடு வழங்கவும் கோரிக்கை வைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.