Categories
விளையாட்டு

4-வது வெற்றியை தட்டி தூக்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ்…. மகிழ்ச்சியில் ரசிகர்கள்….!!!!

டி.என்.பி.எல் போட்டியில் சேலம் ஸ்பார்டன்சை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 4வது வெற்றியை அடைந்தது. சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலாவதாக விளையாடிய சேலம் ஸ்பார்டன்ஸ் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் மட்டுமே எடுக்கமுடிந்தது. இதில் கோபிநாத் அதிகபட்சம் 42 ரன் (4 பவுண்டரி, 1 சிக்சர் ) எடுத்தார். இதையடுத்து மணி மாறன் சித்தார்த் ஒரே ஓவரில் 3 விக்கெட் வீழ்த்தி முத்திரை பதித்தார். பின் சோனு யாதவ், அலெக்சாண்டர் , அருண்குமார் போன்றோருக்கு தலா 1 விக்கெட் கிடைத்தது. அதன்பின் ஆடிய சேப்பாக் சூப்பர்கில்லீஸ் அணியானது 14.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 117 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியடைந்தது. இவற்றில் கேப்டன் கவுசிக் காந்தி 45 பந்தில் 46 ரன்னும் ( 3 பவுண்டரி , 2 சிக்சர் ), ஜெகதீசன் 33 பந்தில் 39 ரன்னும் (5 பவுண்டரி ), சோனு யாதவ் 7 பந்தில் 26 ரன்னும் ( 1 பவுண்டரி , 3 சிக்சர்) எடுத்தனர்.

அதேபோன்று முருகன் அஸ்வின் , பெராரியோ , ரவி கார்த்திகேயன் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர்கில்லீஸ் தொடர்ந்து 4வது வெற்றியை அடைந்துள்ளது. அந்த அணியானது முதல் 2 ஆட்டத்தில் (நெல்லை, மதுரை ) தோற்றிருந்தது. அதன்பிறகு திருச்சி வாரியர்ஸ், கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்சை அடுத்தடுத்து வீழ்த்தியிருந்தது. இந்த வெற்றி வாயிலாக சேப்பாக் சூப்பர்கில்லீஸ் 8 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு முன்னேறிவிட்டது. மதுரை பாந்தர்ஸ் இதேநிலையில் இருந்தாலும் நிகர ரன் ரேட்டில் முன்னிலையில் இருக்கிறது. இந்த வெற்றி தொடர்பாக சேப்பாக் சூப்பர்கில்லீஸ் கேப்டன் கவுசிக்காந்தி கூறியதாவது “வெற்றி மகிழ்ச்சியளிக்கிறது. நாங்கள் எதிர்பார்த்த சில விஷயங்கள் இப்போட்டியில் எங்களுக்கு சாதகமாக அமையவில்லை. இந்த ஆடுகளத்தின் வெளிப்புறபகுதியானது (அவுட் பீல்டு) சிறப்பாக இருந்தது. இதற்கிடையில் ரசிகர்கள் திரண்டு உற்சாகப்படுத்தினர்” என்று கூறினார்.

அதனை தொடர்ந்து ஆட்ட நாயகன் விருதுபெற்ற சேப்பாக் சூப்பர்கில்லீஸ் பந்து வீச்சாளர் மணிமாறன் சித்தார்த் கூறியதாவது “நேர்த்தியாக சரியான திசையை நோக்கி வீசவேண்டும் என்று விரும்பினேன். அதனை சரியாக செயல்படுத்தியது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த புது ஆடுகளத்தில் பேட்ஸ் மேன்கள் சற்று வேகமான பந்துவீச்சை எதிர்பார்த்தனர். என் பந்துவீச்சின் தன்மையை மாற்றி வீசினேன். இதனால் அது விக்கெட்டை கைப்பற்ற உதவியாக இருந்தது. எங்களது அணியில் பல்வேறு மேட்ச் வின்னர்கள் உள்ளதால் இதுபோன்ற வெற்றி சாத்தியமானது” என்று அவர் கூறினார். இதனிடையில் சேலம் அணியானது  தொடர்ந்து 5வது தோல்வியை தழுவி பிளேஆப் சுற்று வாய்ப்பை இழந்துவிட்டது. தோல்வி தொடர்பான அந்த அணி கேப்டன் முருகன் கூறும்போது “நாங்கள் கடுமையாக முயற்சி செய்தாலும் வெற்றிக்காக இன்னும் அதிகமாக உழைக்கவேண்டியது அவசியமாகும். அதற்கு என்ன செய்வது என்பது குறித்து அணியினரிடமும், நிர்வாகத்திடமும் விவாதிக்க முயற்சிப்பேன்” என்று தெரிவித்தார். இன்று நடக்கும் 23வது லீக் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ்-மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகிறது. இதில் மதுரை அணியானது 5-வது வெற்றி ஆர்வத்திலும், திருப்பூர் அணி 3-வது வெற்றி ஆர்வத்திலும் இருக்கிறது.

Categories

Tech |