Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

4 ஓவர்…. 12 ரன்…. 3 விக்கெட்….. தொடர் நாயகன் விருதை தட்டி தூக்கிய ‘சுட்டிக் குழந்தை’..!!

இங்கிலாந்து அணியின் சாம் கரன் தொடர் நாயகன் விருதை தட்டி தூக்கி உள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த 8ஆவது டி20 உலக கோப்பை தொடர் நேற்றோடு முடிவடைந்து விட்டது. இந்த தொடரில் மொத்தம் 16 அணிகள் சூப்பர் 12 சுற்றில் விளையாடியது. இதன் முடிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய 4 அணிகள் அரையிறுதி சுற்றுக்குதகுதி பெற்றது. இதையடுத்து முதல் அரையிறுதியில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது. அதேபோல இரண்டாவது அரையிறுதியில் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது.

இந்நிலையில் நேற்று கோப்பையை வெல்வது யார் என்ற இறுதிப்போட்டியில் முன்னாள் சாம்பியன்களான  இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி  பந்து வீச முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணியின் அபார பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து அணி சார்பில் சிஎஸ்க்கே வீரர்களால் ‘சுட்டிக் குழந்தை’ என்று அழைக்கப்படும் சாம் கரன் அசத்தலாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இதையடுத்து 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 19 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது இங்கிலாந்து அணி.

இப்போட்டியில் 4 ஓவர்கள் வீசி 12 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய சாம் கரன்  ஆட்ட நாயகன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அது மட்டுமில்லாமல் இந்த தொடர் முழுவதுமே சிறப்பாக செயல் பட்டு 13 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கும் சாம்கரன் தொடர் நாயகன் விருதையும் தட்டி தூக்கி உள்ளார்.

இறுதிப் போட்டிக்கு முன்னதாக ஐசிசி இந்த டி20 உலக கோப்பை தொடரில் சிறந்து விளையாடும் வீரர்கள் பட்டியல் ஒன்றை வெளியிட்டது. அதில் ஐசிசி பரிந்துரைத்துள்ள வீரர்களில் யார் அதிக வாக்குகளை பெறுகிறார்களோ  அவர்கள் ஐசிசி தொடர் நாயகன் விருது வெல்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் ஐசிசி தொடர் நாயகன் விருது இந்திய அணியிலிருந்து விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தான் அணியில் இருந்து ஷதாப் கான், ஷாஹின் அப்ரிடி இங்கிலாந்து அணியிலிருந்து ஜாஸ் பட்லர், சாம் கரன், அலெக்ஸ் ஹேல்ஸ், ஜிம்பாப்வே அணியியின் சிக்கந்தர் ராசா, இலங்கை அணியின் வனிந்து ஹசரங்கா ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இறுதி போட்டியில் சிறப்பாக விளையாடி இங்கிலாந்து அணி சாம்பியன்களை பட்டத்தை கைப்பற்ற முக்கிய வீரராக இருந்த சாம்கரனுக்கு இந்த விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்படுகிறது.

Categories

Tech |