அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணத்தை மோசடி செய்த கார் டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் அரண்மனை புதூர் பகுதியில் கருப்பையா என்பவர் வசித்து வந்துள்ளார். கார் டிரைவரான இவர் தனது உறவினரான வீரபாண்டி அருகே உள்ள முத்துதேவன்பட்டி சேர்ந்த முருகன் என்பவர் மகனிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளார். இதனை நம்பிய முருகன் கருப்பையா கேட்ட 2,25,000 ரூபாயை கொடுத்துள்ளார். இதனையடுத்து கருப்பையா அவரது கூட்டாளியான சென்னையை சேர்ந்த செண்பககிரி என்பவரை அறிமுகம் செய்துள்ளார்.
மேலும் மகனுக்கு வேலை கிடைத்துவிடும் என நம்பிய முருகன் செண்பககிரி கேட்ட 1,50,000 ரூபாயையும் அவரது வங்கி கணக்கில் அனுப்பியுள்ளார். ஆனால் பணத்தை வாங்கிக் கொண்டவர்கள் வேலை வாங்கிக் கொடுக்காமல் ஏமாற்றியது தெரியவந்துள்ளது. எனவே இதுகுறித்து முருகன் மற்றும் அவரது மகன் ராஜேஷ் வீரபாண்டி காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரலிங்கம் வழக்கு பதிவு செய்து கருப்பையாவை கைது செய்துள்ளார். மேலும் தலைமறைவாக உள்ள செண்பககிரியை தேடி வருகின்றனர்.