ஈரான் புரட்சி படையின் தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டதை தொடர்ந்து, குவைத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
ஈராக் தலைநகரம் பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தில், அதிபர் ட்ரம்ப் உத்தரவின் பேரில் அந்நாடு நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் புரட்சி பாதுகாப்பு படையின், குத்ஸ் படைப்பிரிவு (Quds Force) தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இவருடன் மேலும் ஆறு பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் உலகமெங்கும் பேசும் பொருளாக மாறியது.

இதைத் தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகள் மத்தியில் பதற்றமான சூழ்நிலை நிலவிவருகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகம் உள்ளிட்டவற்றின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் அமெரிக்காவின் வட கலிபோர்னியாவில் உள்ள ஃபார்ட் பிராக்கிலிருந்து (Fort Bragg) 3 ஆயிரத்து 500 பாதுகாப்பு படையினர் மத்திய கிழக்கு நாடான குவைத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே மேலும் 700 பேர் அனுப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.