Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 33 கோடி மக்களுக்கு ரூ. 31,235 கோடி நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது – மத்திய அரசு அறிவிப்பு!

பிரதமரின் கரீப் கல்யாண் தொகுப்பு நிவாரணத் திட்டத்தின் கீழ் இதுவரை நாடு முழுவதும் 33 கோடி மக்களுக்கு ரூ. 31,235 கோடி நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளது.

முதற்கட்டமாக 8 கோடி விவசாயிகளுக்கு ரூ. 16,146 கோடி வரை நிதி உதவு அளிக்கப்பட்டுள்ளது. 20 கோடிக்கும் மேற்பட்ட மகளிரின் ஜன்தன் வங்கிக் கணக்கில் ரூ. 10,025 கோடி பணம் போடப்பட்டுள்ளது. 2.82 கோடிக்கு மேற்பட்ட முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,405 கோடி வழங்கப்பட்டுள்ளது. 10.6 லட்சம் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் ஈபிஎப் தொகையாக ரூ.162 கோடி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 20.05 கோடி பெண்களின் வங்கி கணக்குகளில் இதுவரை உதவி தொகை செலுத்தப்பட்டுள்ளது என மத்திய அரசு தகவல் அளித்துள்ளது.

31 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 1.19 கோடி ரேஷன் அட்டை வைத்திருக்கும் சுமார் 39.27 கோடி பயனாளிகளுக்கு ஏப்ரல் மாதத்துக்கான பொருள்களாக 19.63 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு உணவு தானியங்கள் வழங்கப்பட்டுள்ளன. பிரதமரின் உஜ்வாலா யோஜ்னா திட்டத்தின் கீழ் மொத்தம் 3.05 கோடி சிலிண்டர்களுக்குப் பதிவு செய்யப்பட்டு, 2.66 கோடி இலவச சிலிண்டர்கள் பயனாளிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

மேலும் கட்டடம், இதர கட்டுமானத் தொழிலாளர்கள் 2.17 கோடி பேருக்கு, கட்டடம் மற்றும் கட்டுமானத் தொழிலாளர் நிதியில் இருந்து உதவித் தொகை அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயனாளிகளுக்கு ரூ.3,497 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த 4 சதவிகித அகவிலைப்படி உயர்வு 2021ம் ஆண்டு, ஜூலை வரையிலும் வழங்கப்படாது என மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. அது வரையிலும் தற்போது வழங்கப்பட்டு வரும் 17 சதவிகித அகவிலைப்படி எந்த மாற்றமுமின்றி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |