கொரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ.3,000 கோடி சிறப்பு நிதி வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமருடனான ஆலோசனை கூட்டத்தில் கோரிக்கை வைத்துள்ளார்.
ஊரடங்கு நிலவரம் குறித்து 2வது நாளாக காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்றுள்ளார். நேற்று சுமார் 21 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார். 2வது நாளாக இன்று 15 மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த கூட்டத்தில் தமிழகம் சார்பில் முதல்வர் பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், செயலாளர் ராதாகிருஷ்ணன், தலைமை செயலாளர் சண்முகம் மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம் குறித்தும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், முழுஉரடங்கு அமல்படுத்தியது தொடர்பாக விளக்கம் அளித்து வருகிறார். மேலும், கொரோனா தடுப்பு பணிகளுக்காக பல்வேறு கோரிக்கைகளை முதல்வர் முன்வைத்துள்ளார். அவை,
* தமிழகத்திற்கு மத்திய தொகுப்பில் இருந்து கூடுதல் உணவு தானியங்கள் வழங்கவேண்டும்.
* மார்ச் மாதத்திற்கான ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
* தேசிய பேரிடர் நிதியில் இருந்து தமிழகத்திற்கு உடனடியாக ரூ.1,000 கோடியை விடுவிக்கவேண்டும்.
* கொரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ.3,000 கோடி சிறப்பு நிதியை வழங்க வேண்டும்.
* மருத்துவ உஅபகரணங்கள் வாங்க சிறப்பு நிதியாக ரூ.3,000 கோடி வழங்க வேண்டும்.
* 2020 -21ம் ஆண்டு நிதிக்குழு மானியத்தில் 50% ஊரக உள்ளாட்சிகளுக்கு விடுவிக்க வேண்டும்.
* கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காகவும், பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் ரூ.9,000 கோடி சிறப்பு நிதி தேவை. முன்னதாக, முதல்வருடன் கடந்த மாதம் 11ம் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.