ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த பிச்சை எடுக்கும் பாட்டி வீட்டில் 2.60 லட்சம் பணம் எடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் நவ்சேரா மாவட்டத்தை சேர்ந்த மூதாட்டி அப்பகுதியில் 30 ஆண்டுகளாக பிச்சை எடுத்து வாழ்ந்து வருகிறார். இவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கடந்த சில நாட்களாக குடிசையிலே முடங்கி கிடந்துள்ளார். இதையடுத்து அப்பகுதி மக்கள் முதியோர் இல்லத்திற்கு தகவல் அனுப்பி உள்ளனர். அங்கு இருந்து வந்த ஊழியர்கள் அந்த பாட்டியை முதியோர் இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் மாநகராட்சி ஊழியர்கள் அந்த பாட்டி வீட்டில் உள்ள குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது வீட்டில் மூட்டை மூட்டையாக சில்லரை பணம் கண்டெடுக்கப்பட்டது. பத்து ரூபாய், இருபது ரூபாய் நோட்டுகள் கவர்களில் வைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். சில்லறை ரூபாய் மட்டும் 80 கிலோ எடை இருந்ததாக மாநகராட்சி ஊழியர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அங்கிருந்த பணம் மொத்தத்தையும் இரண்டு முதல் மூன்று மணி நேரம் எண்ணியதில் 2.60 லட்சம் ரூபாய் இருந்தது தெரியவந்தது. இந்த அத்தனை பணமும் 30 ஆண்டுகளாக அந்த மூதாட்டி எந்த வித சட்ட விரோத செயல்களில் ஈடுபடாமல் பிச்சையெடுத்து சம்பாதித்த பணம் என்று அப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.