Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

30 பதக்கங்களை வென்ற மாணவி….. படுத்த படுக்கையாக கிடக்கும் அவலம்….. பெற்றோரின் கோரிக்கை ….!!!

30 பதக்கங்களை வென்ற சிறுமி  புற்றுநோயால் அவதிப்படும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மேல்கொட்டாய் பகுதியில் சகாதேவன்- லட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மஞ்சு என்ற மகனும், 14 வயதில் சத்யா என்ற மகளும் இருக்கின்றனர். இதில் சத்யா சூலாமலை அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்து வந்துள்ளார். இவர் 5-ஆம் வகுப்பு முதல் சத்யா பல்வேறு தடகள போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். மேலும் மாநில அளவில் நடைபெற்ற 42 மாரத்தான் போட்டிகளில் சத்யா கலந்து கொண்டார். கடந்த 2018- ஆம் ஆண்டு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் சத்யா மாநில அளவில் ஏழாவது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

இவர் சிறு வயதிலிருந்து 30-க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றுள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூலை மாதம் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சத்யாவிற்கு திடீரென முதுகு பகுதியில் வலி ஏற்பட்டதால் பெற்றோர் அவரை கிருஷ்ணகிரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனை அடுத்து சேலம் தனியார் மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்து பார்த்தபோது சத்யாவின் முதுகு தண்டுவடத்தில் புற்றுநோய் கட்டி இருப்பது தெரியவந்தது.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மனைவியின் பெற்றோர் அவரை சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அறுவை சிகிச்சை மூலம் புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டு 2 1/2 மாதங்கள் சிகிச்சைக்கு பிறகு சத்யா வீடு திரும்பினார். பின்னர் நடப்பதற்கு சிரமப்பட்ட சத்யாவை அதே பகுதியில் வசிக்கும் விளையாட்டு பயிற்சியாளர்கள் நடக்க வைத்தனர். கடந்த ஜூலை மாதம் மீண்டும் முதுகு வலி ஏற்பட்டதால் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு சத்யாவை அழைத்து சென்று பரிசோதனை செய்தனர். அப்போது முதுகுப்பகுதியில் மீண்டும் கட்டி வளர்ந்திருப்பது தெரியவந்தது.

இதனால் சத்யா படுத்த படுக்கையானார். சத்யாவின் மருத்துவ சிகிச்சைக்கு 30 லட்சம் ரூபாய் செலவாகும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் சத்யா தரப்பில் 5 லட்ச ரூபாய் கட்டினால், காப்பீடு திட்டத்தில் 20 லட்ச ரூபாயை பெற முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் வறுமையில் வாடும் சத்யாவின் பெற்றோரால் நிலத்தை அடகு வைத்து ஒரு லட்ச ரூபாய் மட்டுமே பெற முடிந்தது. எனவே மகளின் மருத்துவ சிகிச்சை மற்றும் செலவுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் உதவி செய்ய வேண்டும் என சகாதேவன்-லட்சுமி தாம்பதியினர் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |