மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாலிபர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இங்கு வந்த வாலிபர் ஆட்சியர் அலுவலக போர்டிகோவில் நின்றபடி தனது உடல் முழுவதும் பெற்றோலை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்ததும் ஊர்க்காவல் படை வீரரான சுந்தர்ராஜ் என்பவர் அந்த வாலிபரை தடுத்து நிறுத்தியுள்ளார். இந்நிலையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் காட்டுப்புத்தூர் பகுதியில் வசிக்கும் கலைச்செல்வன் என்பது தெரியவந்துள்ளது.
இவர் தனது வீட்டிற்கு குடிநீர் இணைப்பு கேட்டு கிராம நிர்வாக அதிகாரியிடம் விண்ணப்பித்துள்ளார். ஆனால் கிராம நிர்வாக அதிகாரி கலைச்செல்வனின் வீட்டிற்கு குடிநீர் இணைப்பு வழங்க மறுத்துவிட்டார். மேலும் பங்காளிகள் பிரச்சனையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக கலைச் செல்வனின் வீட்டிற்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் கலைச்செல்வன் தீக்குளிக்க முயன்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.