மே 3ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா ? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம்.
தற்போது கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு மே மூன்றாம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள்ளேயே முடங்கி இருக்கின்றன. இந்தியாவில் இன்னும் ஊரடங்கு முடிவடைய 12 நாட்கள் முடிவடைய உள்ள நிலையில், மே மூன்றுக்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? என்ற கேள்வியும், குழப்பமும் பொது மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? என்ற கேள்விக்கு இந்தப்பதிவில் கூறப்பட்டிருக்கும் பதில் என்னவென்றால், ஊரடங்கு நீட்டிப்பதற்கான வாய்ப்புகள் ஏராளம் உள்ளன.
1. தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு தான் வருகிறது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் இன்று புதிதாக 463 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே போல் தமிழகத்திலும் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நமது அரசு கொரோனா அதிக அளவில் பாதிக்கப்பட்ட பகுதிகளை சிகப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்களாக பிரித்து உள்ளது. இதில் சிகப்பிலிருந்து ஆரஞ்சு மண்டலத்திற்கு மாறவேண்டும் என்றால், அப்பகுதியில் குறைந்தது 14 நாட்களுக்கு யாரும் கொரோனாவால் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும். அதன்பின் ஆரஞ்சு பகுதிக்கு மாறியபின் 28 நாட்கள் அதே பகுதியில் யாருக்கும் கொரோனா உறுதி செய்யபடாமல் இருக்க வேண்டும். அதன் பின்பு அந்த பகுதி பச்சைப் பகுதியாக மாற்றப்பட்டு கொரோனா இல்லாத பகுதியாக அறிவிக்கப்படும் என்று அரசு அறிவித்தது.
ஆனால் தற்போதைய சூழ்நிலைக்கு அதிகரிக்கும் கொரோனா பாதிப்பால் தளர்வு இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. எண்ணிக்கை கூடிக் கொண்டேதான் செல்கிறது. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் 18-க்கும் மேற்பட்ட இடங்கள் ஹாட்ஸ்பாட் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பகுதிகள் அனைத்தும் சென்னையில் மிக முக்கிய பகுதிகள். இங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப் பட வேண்டுமெனில் அங்கு பாதிப்பு எண்ணிக்கை குறைய வேண்டும்.
அதேபோல் கொரோனா பரிசோதனையை விரிவுபடுத்த உதவியாக இருந்த ரேபிட் டெஸ்ட் கிட் தற்போது தவறான முடிவுகளை வெளியிட்டு வருவதால், பாதிப்புள்ள நபர்களை கண்டறிய முடியாமல் அரசாங்கம் திணறி வருகிறது. இந்த சூழ்நிலையில் ஊரடங்கு தளர்த்தளாமா என்றால் அரசு இதில் யோசித்துதான் முடிவெடுக்கும். அப்படியே தளர்த்தினாலும் பாதிப்பு இல்லாத இடங்களில் மட்டும் தளர்த்தப்படுமே தவிர நாடு முழுவதும் தளர்த்தப்படாது.
2. இந்தியாவில் ஊரடங்கு நீட்டிக்க படுவதற்கு உறுதியான ஒரு காரணம் ஒன்று உள்ளது. அது என்னவென்றால், சிங்கப்பூர் மிகச்சிறிய நாடு. அங்கு இதுவரை பத்தாயிரத்திற்கும் குறைவானோர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதேபோல் அங்கு உயிரிழப்பு என்பதும் 15ஐ தாண்டவில்லை.
ஆனால் அங்கு ஜூன் 1 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனுடைய பாதிப்பு மேலும் தீவிரம் அடையாமல் இருக்க சிங்கப்பூர் போன்ற நாடுகளை உதாரணமாக கொண்டு இந்திய அரசு ஊராடங்கை நீட்டிக்கலாம்.
அதேபோல் நமது நாட்டிலேயே இதற்குமுன் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த சமயத்தில், தெலுங்கானா மாநிலத்தில் ஊரடங்கு நீட்டிப்பு முதன்முதலில் அமுல்படுத்தப்பட்டது. அதேபோல்தான் தற்போதும் மே 7ம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவும் ஊராடங்கை நீட்டிக்க அடித்தள காரணங்களாக பார்க்கப்படுகிறது.
3. எது எப்படியோ நம்முடைய மக்கள் சமூக விலகலை முறையாக கடை பிடிக்க மாட்டார்கள். அதில் அஜாக்கிரதையாக இருப்பார்கள். எனவே இப்போதைய சூழ்நிலைக்கு ஊரடங்கு தான் சரி என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த கருத்துக்களின் அடிப்படையாக கொண்டும் ஊரடங்கானது இந்தியாவில் நீட்டிக்கப்படலாம்.
எதை செய்தாலும் மக்கள் நலனுக்காகவே அரசு செயல்படும் என்பதை மனதில் கொண்டு நம்பிக்கையோடு இருப்போம்.