டாஸ்மாக் கடையில் துளையிட்டு கொள்ளை அடிக்க முயற்சி செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் டாஸ்மாக் மதுபான கடை உள்ளிட்ட அனைத்து கடைகளையும் மூடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள வல்லாரை கிராமத்தில் இருக்கும் டாஸ்மாக் கடை முழு ஊரடங்கு காரணமாக அடைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த டாஸ்மாக் கடையில் காவலாளியாக பணிபுரியும் பன்னீர்செல்வம் நள்ளிரவு நேரத்தில் கடையிலிருந்து சத்தம் கேட்டதால் அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உடனடியாக பின்புறம் சென்று பார்த்த போது அங்கே நின்று கொண்டிருந்த 3 மர்ம நபர்கள் காவலாளியை பார்த்ததும் தப்பி ஓடி விட்டனர்.
மேலும் டாஸ்மாக் கடையில் பக்கவாட்டுச் சுவரில் மர்ம நபர்கள் துளை போட்டிருப்பதை பார்த்த காவலாளி உடனடியாக டாஸ்மாக் கடை மேலாளருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலாளர் ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் வல்லாரை கிராமத்தில் வசித்து வரும் பன்னீர், மகேந்தர்சிங், மகேந்திர குமார் ஆகிய 3 பேரும் டாஸ்மாக் கடையில் துளையிட்டு கொள்ளை அடிக்க முயற்சி செய்தது தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர் .