விண்வெளியில் கட்டமைப்பு பணிகளுக்காக 3 பேர் அடங்கிய ஒரு குழுவை சீனா விண்ணுக்கு அனுப்பி வைத்துள்ளது.
சீனா விண்வெளியில் டியாங்காங் என்ற தனி விண்வெளி நிலையத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக சீனா பலமுறை தங்கள் வீரர்களை விண்வெளிக்கு அனுப்பி அங்கு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு முன்னதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஷென்சோன் 13 என்ற விண்கலத்தில் 3 விண்வெளி வீரர்களை அனுப்பி வைத்துயுள்ளது.
அந்த 3 வீரர்கள் பூமியில் இருக்கும் சீன வல்லுநர்களுடன் இணைந்து பணிபுரிந்து வருகின்றனர். இதில் ஆறு மாதங்கள் நிறைவடைந்த நிலையில் ஷென்சோன் 13 குழுவினர் மங்கோலியாவின் வடக்குப் பகுதியில் இருக்கும் கோபி பாலைவனத்தில் தரையிறங்கி தற்போது பூமிக்கு திரும்பியுள்ளனர். பின்னர் அடுத்த கட்டமாக சீனா கூடுதலாக 3 வீரர்களை ஜூன் மாதத்தில் விண்வெளிக்கு அனுப்ப ஏற்கனவே திட்டமிட்டுள்ளது.
அதன்படி சீனா தங்களுடைய 3 விண்வெளி வீரர்களை ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுகணை மையத்திலிருந்து லாங் மார்ச் 2 எஃப் ராக்கெட் மூலமாக விண்வெளிக்கு அனுப்பி வைத்துள்ளது. இதன் படி ஷென்சோன் 14 என்ற விண்கலத்தில் சென்ற வீரர்கள் ஆறு மாதங்கள் விண்ணில் தங்கி இருந்து விண்வெளி நிலையத்தின் வெண்டியன், மெங்டியன் ஆகிய 2 தொகுதிகளை சேர்க்கும் பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.