வெளிநாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மூன்று விழுக்காடு அதிகம் என்று மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவிற்கு 2019 ஆம் ஆண்டு வந்து சென்ற வெளிநாட்டவர்கள் எண்ணிக்கை அதன் மூலம் வந்த வருமானம் குறித்த அறிக்கையை சுற்றுலா துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் 2019ஆம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரையிலான 11 மாத காலத்தில் வெளிநாடுகளில் இருந்து 96,69,233 சுற்றுலா பயணிகள் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது இதற்கு முந்தைய 2018 ஆம் ஆண்டில் வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது 3.23 விழுக்காடு அதிகம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதே காலகட்டத்தில் அந்நிய நாட்டு சுற்றுலா பயணிகள் மூலம் அந்நிய செலவாணி வருவாய் 1,75,47,000 ரூபாயில் இருந்து 7.4 விழுக்காடு அதிகரித்து 1,88,36,400 ரூபாயாக இருக்கிறது என்று அந்த அறிக்கையில் சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.