தூங்கிக் கொண்டிருந்த சிறுமிகளின் மீது அமிலத்தால் தாக்குதல் நடத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உத்தரபிரதேச மாநிலத்தில் இருக்கும் கோண்டா மாவட்டத்தை சேர்ந்த 3 சகோதரிகள் அதிகாலை 2 மணி அளவில் தங்கள் அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது மாடி வழியாக வந்த மர்மநபர் தூங்கிக்கொண்டிருந்த 3 பேர் மீதும் அமிலத்தை வீசி தாக்குதல் நடத்தியதாக தெரியவந்துள்ளது. தூங்கிக் கொண்டிருந்த மூன்று மகள்களின் அலறல் சத்தம் கேட்டு அவர்களது தந்தை விரைந்து சென்று பார்த்தபோது அமிலத்தால் அவர்கள் தாக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இந்தத் தாக்குதலில் 5 சதவீத காயங்களுடன் 8 வயது சிறுமியும், 20 சதவீத காயங்களுடன் 12 வயது சிறுமியும், 30 சதவீத காயங்களுடன் 17 வயது சிறுமியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து சகோதரிகளின் தந்தை கூறுகையில், “எனது பெரிய மகளுக்கு அதிகமாக காயம் ஏற்பட்டுள்ளது. அவளுக்கு திருமணம் செய்வதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
தற்போது அமிலத்தால் முகம் சிதைந்த அவளது திருமணம் எப்படி நடக்கும் என்பது எனக்குத் தெரியவில்லை” என வருத்தத்துடன் தெரிவித்தார். இதுகுறித்து காவல்துறையினர் மோப்பநாய் உதவியுடன் விசாரணையை தொடங்கியுள்ளனர். அந்த குடும்பத்திற்கு நன்றாக பழக்கப்பட்டவர் தான் இந்த செயலில் ஈடுபட்டிருக்க வேண்டும் என காவல்துறை அதிகாரி சைலேந்திர குமார் பாண்டே தெரிவித்துள்ளார்.