ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் கொடியை நீக்கிவிட்டு, நாட்டின் தேசிய கொடியை ஏற்றிய நபர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் மூவர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான், தலீபான்கள் கட்டுப்பாட்டிற்கு சென்று விட்டது. எனவே, ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளில் நாட்டின் தேசிய கொடியை நீக்கி விட்டு, தலிபான்களின் கொடியை ஏற்றியுள்ளார்கள். இதனிடையே தலிபான்களின் ஆட்சியை எதிர்த்து நாட்டின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் நகங்ஹர் மாகாணத்தில் உள்ள ஜலாலாபாத் நகரத்தில் தலீபான்களை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, அங்கு தலிபான்களின் கொடி ஏற்றப்பட்டிருந்ததை ஆர்ப்பாட்டக்காரர்கள் நீக்கிவிட்டு, ஆப்கானிஸ்தான் நாட்டின் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்கள்.
அப்போது, திடீரென்று தலிபான்கள் அங்கு வந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினார்கள். இதில் மூவர் பலியானதாகவும், 12 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.