கர்நாடகாவில் மூன்று வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகத்தின் ஹாசன் மாவட்டத்தில் 3 வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் 4 குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10 பேர் காயம் அடைந்து இருக்கின்றனர். இது தொடர்பாக காவல்துறை அதிகாரி பேசிய போது அர்சிகெரே தாலுகா பகுதியில் சனிக்கிழமை இரவு 11 மணி அளவில் இந்த விபத்து நடைபெற்று உள்ளது. பால் டேங்கர் லாரி கர்நாடக மாநில அரசு பேருந்து, டெம்போவேன் ஆகிய மூன்று வாகனங்களும் மோதிக் கொண்டுள்ளது. இதில் பேருந்து மற்றும் டேங்கர் லாரி இடையே சிக்கி டெம்போவேன் உருக்குலைந்து போனது.
இந்த நிலையில் இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கின்றனர் மேலும் மூன்று பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். இதனை அடுத்து காயமடைந்த 10 பேர் ஹாசன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். உயிரிழந்த அனைவரும் டெம்போ வாகனத்தில் பயணம் செய்தவர்கள் என காவல்துறையினர் கூறியுள்ளனர். விபத்து நேர்ந்த சாலையில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்ற நிலையில் மாற்றுப்பாதையில் செல்வதற்கான அறிவிப்பு பலகையை கண்டு கொள்ளாமல் தவறான பாதையில் டேங்கர் லாரி ஓட்டுனர் சென்றதே இந்த விபத்திற்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஹரிராம் சங்கர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனை அடுத்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் பசவராஜ் பொம்மை அவர்களது குடும்பத்தினருக்கு தல 2 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். அதேபோல் ஹாசன் மாவட்டத்தைச் சேர்ந்தவரான முன்னாள் பிரதமர் தேவ கௌடாவும் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் புனித தளங்களுக்கு சென்று விட்டு சொந்த ஊர் திரும்பிய போது இந்த விபத்து நடைபெற்றுள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.