தேசிய தேர்வுமுகமை வாயிலாக மருத்துவ படிப்புக்கு வருடந்தோறும் தேசியதகுதி மற்றும் நுழைவுத் தேர்வு-2022 (நீட்) நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடத்துக்கான எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். மற்றும் ஆயுஷ் போன்ற படிப்புகளுக்கான தேர்வு நேற்று நடைபெற்றது. சென்ற வருடங்களில் நீட்தேர்வுக்கு தூத்துக்குடியில் தேர்வுமையம் இல்லாமல் இருந்தது. இதன் காரணமாக தூத்துக்குடி மாணவர்கள் நெல்லை மாவட்ட தேர்வு மையங்களுக்கு சென்று தேர்வு எழுதினர். இதனால் தூத்துக்குடியில் நீட்தேர்வு மையங்கள் அமைக்கவேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வருடம் தூத்துக்குடியை சேர்ந்த மாணவ-மாணவிகள் நீட்தேர்வை எழுதுவதற்கு வசதியாக அங்கு 3 தேர்வுமையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.
சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியிலுள்ள மையத்தில் 360 பேரும், அரசூர் வி.வி.நகர் வி.வி.பொறியியல் கல்லூரியில் 1008 பேரும், தூத்துக்குடி முத்தம்மாள் காலனி அழகர் பப்ளிக் பள்ளியிலுள்ள மையத்தில் 502 பேரும் ஆக மொத்தம் 1870 மாணவ, மாணவிகள் நீட்தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இத்தேர்வு நேற்று மதியம் 2 மணிக்கு துவங்கியது. இதற்கென 1 மணி நேரத்துக்கு முன்பாக தேர்வு மையத்துக்கு மாணவர்கள் வர வேண்டும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த அடிப்படையில் நேற்று காலை முதல் 3 மையங்களிலும் மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோருடன் வந்து குவிந்திருந்தனர்.
பின் மாணவிகள் அணிருந்த காதணி, தங்கசங்கிலி வளையல் உள்ளிட்ட அனைத்து அணிகலன்களையும் கழற்றி பெற்றோரிடம் ஒப்படைத்த பிறகு, வெப்பநிலை பரிசோதனை நடத்தப்பட்டு தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். அத்துடன் அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்தனர். அதனை தொடர்ந்து மதியம் 2 மணிமுதல் மாலை 5:20 மணிவரை தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் மாவட்டத்திலுள்ள 3 மையங்களிலும் மொத்தம் 1,690 பேர் தேர்வு எழுதினர். இதனிடையில் 180 பேர் தேர்வு எழுதவில்லை. தேர்வை முன்னிட்டு மையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.