Categories
தேசிய செய்திகள்

3 மாதத்தில்…. 76 குழந்தைகள் மீட்பு….”நான் ஒரு தாய்” பெண் காவலரின் அயராத பணி…!!

கடந்த மூன்று மாதங்களில் காணாமல்போன 76 குழந்தைகளை மீட்ட பெண் காவலருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது

டெல்லியில் உள்ள சமாய்பூர் பத்லி  காவல் நிலையத்தின் தலைமை கான்ஸ்டபிளாக பணி புரிந்து வந்தவர் சீமா தக்கா.  இவர் தனது அயராத பணியால் மூன்று மாதத்தில் காணாமல் போன 76 குழந்தைகளை மீட்டு பெற்றோருடன் சேர்த்துள்ளார். இத்தகைய பாராட்டுக்குரிய செயலினால் ஆகஸ்ட் மாதம் காவல்துறை ஆணையர் அறிவித்த ஆசாதரன் காரியா புராஸ்கர் ஊக்கத் திட்டத்தின் அடிப்படையில் சீமாவிற்கு பதவிஉயர்வு கொடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டெல்லி நகர காவல்துறை கூறுகையில், “காணாமல் போன 76 குழந்தைகளை கண்டுபிடித்ததற்காக சீமா தக்காவிற்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அவரது கடுமையான முயற்சியால் பல குடும்பங்கள் மீண்டும் மகிழ்ச்சி அடைந்துள்ளது. இவரைப் பார்க்கும்போது டெல்லி காவல்துறை பெருமிதம் கொள்கிறது” என கூறியுள்ளது.  இது குறித்து சீமா தக்கா கூறுகையில், நானும் ஒரு தாய் தான்.

தனது குழந்தையை இழக்க எந்தத் தாயும் விரும்பமாட்டார்கள். நாங்கள் ஒவ்வொரு நாளும் குழந்தைகளை மீட்பதற்காக கடிகாரத்தை போல் சுற்றிக் கொண்டிருந்தோம். இந்த ஆபரேஷனில் மறக்க முடியாத சில சம்பவங்கள் உள்ளது. அக்டோபர் மாதம் மேற்குவங்கத்தில் சிறுவனை மீட்ட போது இரண்டு வருடங்களுக்கு முன்பு புகார் கொடுத்த அவனது தாய்  அதன் பிறகு முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை மாற்றி விட்டார்.

வேறு ஒரு கிராமத்திற்கு குழந்தைகளை தேடி சென்றபோது வெள்ளம் ஏற்பட்ட இரண்டு நதிகளை கடந்து செல்ல வேண்டியிருந்தது. காணாமல் போன சிறுவர்கள் சிலர் பெற்றோரிடம் சண்டையிட்டு விட்டு மது போதைக்கு அடிமையாகி இருந்தனர். அவர்களை திருத்தி மீண்டும் பெற்றோரிடம் ஒப்படைத்தோம்” எனக் கூறினார். பெண் காவலரின் செயலுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவிக்கின்றனர்.

Categories

Tech |