3 வடிவிலான கிரிக்கெட்டிலும் கேப்டனாக இருக்கும் பாபர் அசாம், டி20 வடிவத்தில் மட்டும் கேப்டன் பொறுப்பை கைவிட வேண்டும் என்று ஷாஹித் அப்ரிடி தெரிவித்துள்ளார்..
ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த 2022 டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தானை வீழ்த்தி ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த டி20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி தொடக்கத்தில் 2 போட்டியில் தொடர்ச்சியாக தோல்வியடைந்த போதிலும், அதன் பின் வரிசையாக 3 வெற்றிகளை பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது. அதாவது நெதர்லாந்து அணி, தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியதால் அதிர்ஷ்டத்தால் உள்ளே நுழைந்த பாகிஸ்தான அணி அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இறுதி போட்டிக்கு சென்றது.
இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியுடன் போராடியது. இருப்பினும் பாகிஸ்தானுக்கு தோல்வியே மிஞ்சியது. இந்த இறுதிப் போட்டியில் பாபர் அசாம் 32 ரன்கள் எடுத்தார். மேலும் டி20 உலக கோப்பை தொடர் முழுவதுமே பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் சரியாக ஆடவில்லை. மொத்தமாக அவர் 7 போட்டிகளில் 124 ரன்கள் மட்டுமே குவித்துள்ளார். அதிகபட்சமாக அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக 53 ரன்கள் எடுத்திருந்தார். இதனால் அவர் மீது முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலரும் விமர்சனங்களை முன் வைத்தனர். மேலும் கேப்டன் பாபர் அழுத்தம் காரணமாக சரியாக ஆடவில்லை எனவும் விமர்சனம் எழுந்து வருகிறது.
இதற்கிடையே கேப்டன் பாபர் அசாம் கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று கிரிக்கெட் வட்டாரத்தைச் சேர்ந்த பலர் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த சூழலில் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் ஜாம்பவான் ஷாஹித் அப்ரிடியும் டி20 வடிவத்தில் பாபர் அசாம் கேப்டன் பொறுப்பை கைவிட்டு, அதற்கு பதிலாக பேட்டிங்கில் கவனம் செலுத்தி ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அணியை வழிநடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அப்ரிடி சாமா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், டி20 கிரிக்கெட்டில் பாபர் அசாம் கேப்டன் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவர் பேட்டிங்கில் கவனம் செலுத்தி டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் அணியை வழிநடத்த வேண்டும். நான் பாபரை மிகவும் மதிக்கிறேன், அதனால்தான் அவர் டி20 கிரிக்கெட்டில் கேப்டன் பதவியில் அழுத்தம் கொடுப்பதை நான் விரும்பவில்லை. நீண்ட வடிவங்களில் (ஒருநாள் டெஸ்ட்) அவர் கேப்டன்ஷிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன். டி20 வடிவத்தில் அணியை வழிநடத்துவதற்கு உங்களிடம் ஷதாப் கான், ரிஸ்வான் மற்றும் ஷான் மசூத் போன்ற வீரர்கள் உள்ளனர் என்று கூறினார்.