கண்ணதாசன் புகழ் பெற்ற தமிழ்திரைப்பட ஆசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் எழுதியுள்ளார். சண்டமாருதம் திரை ஒலி தென்றல் தென்றல்திரை முல்லை கண்ணதாசன் போன்றவற்றின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்திய அகடமி விருது பெற்றவர். கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா. தமிழ்நாடு சிறுகூடல்பட்டியில் தன வணிகர் மரபில் பிறந்தார். தாய் விசாலாட்சி ஆச்சி தந்தை சாத்தப்பன் இவருடன் உடன்பிறந்தோர் 8 பேர்.
சிறு வயதில் இவரை ஒருவர் 7000 ரூபாய்க்கு தத்து எடுத்துக்கொண்டார். அவர் வீட்டில் நாராயணன் என்ற பெயரில் வாழ்ந்தார். ஆரம்பக் கல்வி சிறுகூடல்பட்டியில் அமராவதி புதூர் உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். 1943 ஆம் ஆண்டில் திருவெற்றியூர் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். அதன் பின் கண்ணதாசன் என்று தன பெயரை மாற்றிக்கொண்டார். கண்ணதாசனுக்கு முதல் திருமணம் பொன்னழகி என்கிற பொன்னம்மா என்பவருடன் 1950 பிப்ரவரி 9ஆம் நாள் காரைக்குடியில் நடைபெற்றது. இவர்களுக்கு கண்மணி சுப்பு கலைமாணி ராமசாமி வெங்கடாசலம் ஆகிய 4 மகன்களும், அலமேலு சொக்கலிங்கம் தேனம்மை விசாலாட்சி ஆகிய மூன்று மகள்களும் உள்ளனர்.
கண்ணதாசன் தனக்கு முதல் திருமணம் முடிந்த சில நாட்களிலேயே பார்வதி என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு காந்தி கமல் அண்ணாதுரை கோபால கிருஷ்ணன் சீனிவாசன் ஆகிய 5 மகன்களும், ரேவதி கலைச்செல்வி ஆகிய 2 மகள்களும் உள்ளனர். ஐம்பதாவது வயதில் வள்ளியம்மை என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விசாலி என்னும் மகள் ஒருவர் உள்ளார்.
அண்ணாவின் திராவிட கழகத்தில் இணைந்த கண்ணதாசன் 1961 ஏப்ரல் 9 கருத்து வேறுபாட்டால் கட்சியில் இருந்து வெளிப்பட்டார். உடல்நிலை குறை காரணமாக 1981 ஜூலை 24 இல் அமெரிக்காவின் சிகாகோ நகர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு அக்டோபர் 17 சனிக்கிழமை இந்திய நேரம் பத்து நாற்பத்தி ஐந்து மணிக்கு உயிரிழந்தார். அக்டோபர் 20 அமெரிக்காவிலிருந்து அவரது உடல் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு இலட்சக்கணக்கான மக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு அரசு மரியாதையுடன் அக்டோபர் 22 இல் நல்லடக்கம் செய்யப்பட்டது.