திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குடவாசல் என்ற தாலுகாவில் அன்னியூர் என்ற ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில் உள்ள பாகசாலை என்ற கிராமத்தில், 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. மேலும் இவர்கள், இங்கு 3 தலைமுறைகளுக்கும் மேலாக வசித்து வரும் நிலையில், அவர்களுக்கு உரிய சுடுகாடானது, ஆற்றின் மறு கரையில் உள்ளது.
இந்நிலையில் இந்த சுடுகாட்டுக்கு செல்ல வேண்டுமென்றால், கோடை காலங்களில் ஆற்றில் தண்ணீர் இல்லாமல் இருக்கும்போது, ஆற்றில் இறங்கி செல்வார்கள். மேலும் மழைக்காலங்களில், ஆற்றில் தண்ணீர் சென்று கொண்டிருக்கும் நிலையில், அதில் இறங்கி, நீந்திதான், இறந்தவர்களை கொண்டு சென்று, அங்கு தகனம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்கள்.
மேலும் 3 தலைமுறைகளுக்கும் மேலாக, இவ்வாறு தான், இறந்தவர்களை எடுத்துச் சென்று, தகனம் செய்வதாக, அந்த ஊர் மக்கள் வேதனையுடன் தெரிவிக்கிறார்கள். எனவே , அரசு உடனடியாக, இந்த நிலைமையை கவனத்தில் கொண்டு, ஒரு சிறிய அளவில், ஒரு பாலமாவது அமைத்து தர வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்கள்.