தொழிலாளி தனது மனைவி மற்றும் குழந்தைகளோடு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மாம்பழப்பட்டு கிராமத்தில் கூலி தொழிலாளியான கண்ணன்(40) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவகி(33) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கண்ணன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று தன் மீதும் மனைவி மற்றும் குழந்தைகள் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி முன்னெச்சரிக்கையாக அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர்.
இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கண்ணன் கூறியதாவது, எனக்கு சொந்தமான காலி மனையில் அரசு சார்பில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தில் தற்போது வீடு கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளேன். ஆனால் அக்கம்பக்கத்தில் வசிக்கும் சிலர் வீட்டை கட்ட விடாமல் தொந்தரவு செய்கின்றனர். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தீக்குளித்து முயன்றதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.