2017ஆம் ஆண்டு பிப்ரவரி 16ஆம் தேதி முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்றுக் கொண்டார். அன்றைய தினம் முதல் இன்றுவரை மூன்றாண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. இந்த மூன்றாண்டுகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுடைய அரசு என்னென்ன சாதனைகள் எல்லாம் செய்திருக்கிறது என்பது குறித்து தற்போது 7 புத்தகங்களாக வெளியிடும் நிகழ்ச்சி தலைமை செயலகத்தில் நடைபெற்றது.
கடந்த மூன்றாண்டுகளில் மொத்தமாக16,382 கோப்புகளில் முதலமைச்சர் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டு இருக்கின்றார். துறைவாரியாக பல்வேறு சாதனைகள் செய்யப்பட்டிருக்கின்றன. 11 மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் , நிர்வாக வசதிகளுக்காக 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது. 2.5 கோடி குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு சிறப்பு பரிசு ரூபாய் 1000 வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சை டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மூலம் 8000 கோடிக்கும் அதிகமான முதலீடுகளை ஈர்க்கப்பட்டுள்ளன.மத்திய அரசின் நல்ல ஆளுமைத் திறனுக்கு வரிசையில் தமிழகம் முதலிடம் பெற்றிருக்கிறது.
இப்படி வருவாய் துறை , பொதுப்பணித்துறை , பிற்படுத்தப்பட்ட துறை , ஆதிதிராவிட நலத்துறை , போக்குவரத்துத் துறை , சுகாதாரத் துறை , நீதித் துறை உள்ளிட்ட 43 துறைவாரியாக தமிழக அரசின் சாதனைகள் என்னென்ன என்பதை புத்தகமாக விளக்கி வெளியிடப்பட்டது. தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இதனை தமிழக முதலவர் வெளியிட துணை முதலவர் ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக் கொண்டார். இதில் தலைமை செயலாளர் , அமைச்சர்கள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.