கடந்த 2017 ஜூலை மாதம் 31ஆம் தேதி பிரதமர் தனது உரையில் சண்டிகர் மற்றும் புதுச்சேரியில் பொருள் விநியோக திட்டத்தை முழுமையாக நிறுத்தி குடும்ப அட்டைதாரர்களுக்கு மானிய தொகையினை நேரடியாக வங்கி கணக்கில் போடப்படுகிறது என தெரிவித்துள்ளார். மேலும் இதே முறையினை நாடு முழுவதும் எல்லா மாநிலங்களும் அமலுக்கு கொண்டு வரப் போவதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால் அரிசிக்கு பதிலாக பணப்பட்டுவாடா என முதலில் கூறி காலப்போக்கில் புதுச்சேரி மாநில அரசு அந்த பண பட்டுப்பாவையும் நிறுத்தியுள்ளது.
இதன் விளைவாக கடந்த 15 மாதங்களாக சிவப்பு குடும்ப அட்டைகளுக்கு 20 கிலோ அரிசிக்கு பதிலாக வழங்கப்பட்ட ரூபாய் 600, மஞ்சள் குடும்ப அட்டைக்கு 10 கிலோ அரிசிக்கு பதிலாக வழங்கப்பட்ட ரூபாய் 300 வழங்கப்படவில்லை. அதிலும் குறிப்பாக மக்களுக்கு 15 மாதங்களில் கிடைக்க வேண்டிய ரூபாய் 9000 மற்றும் 4500 இதுவரை கிடைக்கவில்லை. இதன் காரணமாக வறுமை நிலையில் உள்ள ஏழை எளிய மக்களால் தங்களின் உணவு தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை இருக்கிறது. கொரோனா காலத்திற்குப் பின் ஏழை எளிய மக்கள் வேலை இல்லாமல் வாழ்வாதாரத்தை இழந்து வருமானம் இன்றி விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர்.
இத்தகைய அவல நிலைக்கு பிறகும் கூட அரிசி வழங்கவோ அல்லது அரிசிக்கு பதிலான பணப்பட்டுவாடா செய்யவும் பாஜக, என் ஆர் காங்கிரஸ் கூட்டணி முன்வராதது கண்டனத்திற்குரியதாகும். இது ஒருபுறமிருக்க மற்றொருபுறம் புதுச்சேரி மாநிலத்தில் காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் போன்ற அனைத்து இடங்களிலும் கடந்த மூன்று வருடங்களாக நியாய விலை கடைகள் மூடப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக இலவச அரிசி மானிய விலை ரேஷன் பொருட்களை நம்பியிருக்கும் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதனால் சிவப்பு அட்டைக்கு மாதம் 20 கிலோ அரிசியில் மஞ்சள் அட்டைக்கு மாதம் 10 கிலோ இலவச அரிசியும் முன்பு போன்று தொடர்ந்து வழங்க வேண்டும்.
சிவப்பு அட்டைதாரர்களுக்கும் மஞ்சள் குடும்ப அட்டைதாரர்களுக்கும் கடந்த 15 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்ற பணத்தை வழங்க வேண்டும். மேலும் மூடப்பட்ட ரேஷன் கடைகளை திறந்து தரமான இலவச அரிசி மற்றும் மானிய விலையில் பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களை வழங்க புதுச்சேரி அரசு முன் வரவேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி வலியுறுத்துகிறது என வேல்முருகன் தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்.