தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவராக இயக்குனர் திரு ஆர் கே செல்வமணி மூன்றாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திரு ஆர்கே செல்வமணி, துணைத் தலைவர், பொருளாளர், இணை செயலாளர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு போட்டியின்றி பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், இந்த சம்மேளனத்திற்கு நான் தலைவராக வந்தது விபத்தாக நடந்தது. ஆனாலும் வந்த பிறகு அனைவரோடு ஒத்துழைப்பாலும், அனைவரோட அன்பாலும், நம்மோடு பழகிய உறுப்பினர்களுக்கு, நம்மோடு இணைந்து பணியாற்றிய உறுப்பினர்களுக்கு நல்வாழ்வுக்கு என்னால் சில சேவைகளை செய்ய முடியும் என்று நம்பிக்கை இருப்பதாலும் தொடர்ந்து இந்த தலைவர் பதவிக்கு 3-வது முறையாக போட்டியிடுவதற்கு நான் சம்மதித்தேன்.
சம்மேளனத்தில் அனைத்து சங்கங்களும் ஒருமனதாக ஒருங்கிணைந்து தலைவர் மட்டுமல்லாமல் என்னுடன் இணைந்து பணியாற்றி போட்டியிட்ட அனைவரையுமே போட்டி இன்று தேர்ந்தெடுத்து உள்ளார்கள். எங்கள் மீது நம்பிக்கை வைத்த சங்க நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் மீண்டும் எங்களுடைய இதயம் கனிந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். நிச்சயமாக சங்க உறுப்பினர்களுக்கும் , சங்க உறுப்பினர்களின் நன்மைக்கும் தொடர்ந்து உறுதியாக பாடுபடுவோம் என்பதை மட்டும் இந்த நேரத்தில் உறுதிகொள்ள விரும்புகின்றோம் என செல்வமணி தெரிவித்தார்.