பிறந்து ஏழு நாட்களான பெண் குழந்தையை பெற்ற தாயை எருக்கம்பால் ஊற்றி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம், மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த முத்துவேல், தேன்மொழி என்ற தம்பதிகளுக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தேன்மொழி மூன்றாவதாக கர்ப்பம் தரித்தார். மூன்றாவது ஆண் குழந்தை தான் பிறக்கும் என்று பெரிய எதிர்பார்ப்பில் இருந்த அவர்களுக்கு பெண் குழந்தைதான் பிறந்தது. இதனால் குடும்பத்தினர் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர். குழந்தை பிறந்த அடுத்த ஏழு நாட்களில் குழந்தை இறந்து விட்டதாக உடலை அடக்கம் செய்தனர்.
ஆனால் குழந்தை மர்மமான முறையில் இறந்ததாக கூறி அந்த கிராமத்தை சேர்ந்த செவிலியர் ஒருவர் வருவாய் துறைக்கு புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து குழந்தையின் உடலை தோண்டி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தேன்மொழி மற்றும் அவரின் தாயாரிடம் விசாரணை செய்ததில், தேன்மொழியின் தாயார் உமா குழந்தைக்கு எருக்கம்பால் கொடுத்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து உமா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.